கோவை அருகே, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருட முயன்ற முகமூடி ஆசாமிகள்


கோவை அருகே, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருட முயன்ற முகமூடி ஆசாமிகள்
x
தினத்தந்தி 24 Dec 2019 3:30 AM IST (Updated: 23 Dec 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் முகமூடி ஆசாமிகள் திருட முயன்றனர். அப்போது வந்த பெண்கள் கூச்சலிட்டதால் அவர்கள் மீது கற்களை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துடியலூர்,

கோவை கவுண்டர்மில்ஸ் அடுத்துள்ள உருமாண்டம்பாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முகமூடி அணிந்துக்கொண்டு வந்த 2 ஆசாமிகள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள அம்மன் சன்னதியை திறக்க முயன்றனர்.

மார்கழி மாதம் என்பதால் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்த பெண்கள் மர்ம நபர்களின் நடமாட்டத்தை பார்த்து திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முகமூடி ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதைத் தொடர்ந்து பெண்களும் அவர்களை துரத்தினர். அப்போது முகமூடி ஆசாமிகள் கீழே கிடந்த கற்களை எடுத்து பெண்கள் மீது வீசினர். பின்னர் கோவிலின் வெளியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று மறைந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், சமீப காலமாக இந்த பகுதியில் காவலாளிகள் இல்லாத கோவில்களில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஒருவேளை கோவில்களில் எதுவும் கிடைக்காவிட்டால், மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் பெண்கள் மட்டும் தனியாக கோவிலுக்கு வருவார்கள் என்பதை அறிந்து நகை பறிக்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.

Next Story