ரூ.1 லட்சம் ரொக்கம், 100 காமாட்சி விளக்குகள் பறிமுதல், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
100 காமாட்சி விளக்குகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவைகள் வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்,
ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் செல்வமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் ஜெயங்கொண்டம் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 100 பித்தளை காமாட்சி விளக்குகள் மற்றும் சில்வர் தட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்த செல்வராசு மகன் ஜெயசங்கர் என்பதும், உரிய ஆவணமின்றி காமாட்சி விளக்குகள் மற்றும் சில்வர் தட்டுகளை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து காமாட்சி விளக்குகள், சில்வர் தட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அந்த வழியாக வந்த காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தபோது, திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் மகன் விஜயசாரதி என்ற மாணவர், உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500-யை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விளக்குகள், தட்டுகள் மற்றும் பணம் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story