ஊட்டியில் கண்டன பொதுக்கூட்டம்: குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து - ஆ.ராசா எம்.பி. பேச்சு


ஊட்டியில் கண்டன பொதுக்கூட்டம்: குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து - ஆ.ராசா எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 24 Dec 2019 3:45 AM IST (Updated: 24 Dec 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என ஆ.ராசா எம்.பி. பேசினார்.

ஊட்டி,

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இப்ராகிம் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் இந்திய தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா அவசர கோலத்தில் ஜனநாயக நெறிமுறைகளை குழியில் புதைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாளில் அமைச்சரவை கூட்டம், மறுநாளில் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றுதல், மறுநாள் ராஜ்யசபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட இனம், மதம் சார்ந்த மக்களை அரசியல் சட்ட வளையத்தில் விலக்கி வைக்கிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கு மசோதா ஆதரவாகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் உள்ளது. இந்திய மக்களின் ஜனநாயக இறையாண்மைக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கிறது.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர், பா.ம.க. எம்.பி.யும் மசோதாவுக்கு ஆதரவு அளித்ததால் நிறைவேறி உள்ளது. தற்போது ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதாக அ.தி.மு.க. அரசு அறிவித்து இருக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பா.ஜனதாவுடன் இருக்கும் வரை இந்திய இறையாண்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு ஆபத்து உள்ளது. போராட்டம் நடத்தும் ஒவ்வொரு மக்களும் மசோதாவுக்கு ஆதரவளித்த எம்.பி.க்களின் வீட்டு முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும்.

கூட்டத்தில் எழுத்தாளர் மதிமாறன், இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகி முஸ்தபா உள்ளிட்டோர் பேசினர். முடிவில் துணைத்தலைவர் அப்துல் சமது நன்றி கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். 

Next Story