தொடர்மழை பெய்தபோதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிரம்பாத கங்காதீஸ்வரர் கோவில் குளம் வடிகால்களை சீரமைக்க கோரிக்கை


தொடர்மழை பெய்தபோதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிரம்பாத கங்காதீஸ்வரர் கோவில்  குளம் வடிகால்களை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2019 10:30 PM GMT (Updated: 23 Dec 2019 7:18 PM GMT)

சென்னையில் தொடர்மழை பெய்தபோதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிரம்பாமல் புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் வறண்டு காணப்படுகிறது. எனவே வடிகால்களை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோவில். இங்குள்ள தெப்பக்குளத்தில் தைப்பூசத்தையொட்டி 3 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கோவிலின் சுற்றுப்பகுதிகளில் இருந்து தெப்பக்குளத்துக்கு மழைநீர் வந்து சேரும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டு வரை தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில், மழைநீர் வடிகால் குழாய்களில் குடியிருப்புகளின் கழிவுநீர் குழாய்கள் முறைகேடாக இணைக்கப்பட்டதால், கோவில் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலந்து மீன்கள் செத்து மிதந்தன. இதையடுத்து மழைநீர் வடிகால் குழாய் கோவில் நிர்வாகம் சார்பில் கான்கிரீட் மூலம் அடைக்கப்பட்டது.

மழைநீர் வடிகால் குழாயை அடைத்ததால் தண்ணீர் வரத்து இன்றி குளம் வற்றிப்போனதால் இதுவரை தெப்பத்திருவிழா நடத்த முடியவில்லை. இதனால் பக்தர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். சென்னையில் தொடர்மழை பெய்தபோதும் இந்த குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிரம்பாமல் தற்போது வறண்டு காணப்படுகிறது.

இதுகுறித்து புரசைவாக்கம் பகுதி மக்கள் சார்பாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், அமைச்சருக்கு புகார் தெரிவித்தும் மழைநீர் வடிகால் குழாய்களில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டு தடுக்கப்படவில்லை என்றும், மாறாக புதிதாக மேலோட்டமாக மழைநீர் குழாய்கள் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி மட்டும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றின் மூலம் மழைநீர் தெப்பக்குளத்துக்கு வருவது இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தெப்பக்குளத்துக்கு ஏற்கனவே மழைநீர் வந்து கொண்டிருந்த மழைநீர் வடிகால் குழாய்களை கண்டறிந்து அவற்றில் கழிவுநீர் கலக்காமல் சீரமைத்து, மீண்டும் மழைநீர் தெப்பக்குளத்துக்கு வருவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Next Story