தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை மனு
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தென்காசி,
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் சுப்பராஜா மஹால் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமச்சந்திர பிரபு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்தனர். பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 1,168 மனுக்கள் பெறப்பட்டன.
அகில பாரத இந்து மகாசபை மாவட்ட செயலாளர் தங்கதுரை கொடுத்த மனுவில், தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 17-8-2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். 12 ஆண்டுகள் கடந்தும் இதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
சங்கரன்கோவில் அருகில் உள்ள குருவிகுளம் யூனியனை சேர்ந்த காரிசாத்தான் பஞ்சாயத்தை இரண்டாக பிரித்து நிட்சேப நதிக்கு தென்புறம் உள்ள கிராமங்களான புது சுப்புலாபுரம் சம்சிகாபுரம், நெசவாளர் காலனி தெற்கு மலையடிப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களையும் உள்ளடக்கி தனி பஞ்சாயத்தாக மாற்றித்தருமாறு கேட்டு அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்காசி வட்டார செயலாளர் கண்ணன் கொடுத்த மனுவில், பாவூர்சத்திரத்தில் ஒரு கடையில் நெல் விதை வாங்கியபோது அது கலப்பட விதையாக இருந்தது என்றும், கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
தென்காசி களக்கோடி தெருவை சேர்ந்த செய்யது சுலைமான் என்பவர் கொடுத்த மனுவில், தென்காசி ரெயில் நிலையம் வடபுறம் சாக்கடை நீர் சாலையில் தேங்கி இருப்பதை அகற்றவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பின் பொருளாளர் சுரேஷ் ராஜா கொடுத்த மனுவில், வீரகேரளம்புதூரில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
பண்பொழி சுற்றுவட்டார விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியன் கொடுத்துள்ள மனுவில், பண்பொழி பகுதியில் நெல் கொள்முதல் விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் செல்லத்துரை கொடுத்த மனுவில் அச்சன்புதூர் அருகில் உள்ள கல்யாண பாண்டியபுரத்திற்கு வடபுறம் இருக்கும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மங்கம்மாள் சாலை பகுதி பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை வசதி, வாறுகால் வசதி, தெருவிளக்கு வசதி அமைத்து தரக்கோரி மனு கொடுத்தனர்.
முன்னாள் தென்காசி கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் கொடுத்துள்ள மனுவில், கடையநல்லூர் அண்ணாமலை நகர் கோவிலுக்கு சொந்தமான நன்செய் நிலத்தில் முறைகேடாக அத்துமீறி போடப்பட்ட பாதையை அகற்றி நிலத்தை மீட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இலத்தூரை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் கொடுத்துள்ள மனுவில், செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் இலத்தூரில் இருந்து செங்கோட்டை வரை ஒரு ஆண்டு காலமாக ஏற்பட்டுள்ள குழிகளில், இடிந்து விழுந்த கட்டிட பாகங்களை கொண்டு நிரப்பி உள்ளார்கள். இதனால் அந்த வழியாக செல்பவர்களின் மீது செங்கலின் துகள்கள் விழுகின்றன என்றும் அந்த இடத்தில் தார் கலந்த ஜல்லி கற்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கடையநல்லூர் தாலுகா கம்பனேரி புதுக்குடி பகுதி 2 என்ற ஊரைச் சேர்ந்த குருநாதன் என்பவருக்கு ரூ.10 ஆயிரத்து 890 மதிப்புள்ள நத்தம் பட்டா, நயினாரகரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவருக்கு ரூ.2 ஆயிரத்து 587 மதிப்புள்ள வீட்டுமனை பட்டா, அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு ரூ.2 ஆயிரத்து 555 மதிப்புள்ள வீட்டுமனைப்பட்டா ஆகியவற்றையும், சங்கரன்கோவில் அருகில் உள்ள சென்னிகுளத்தை சேர்ந்த ஆர்மோனிய கலைஞர் குருநாதன் என்பவருக்கு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நிதி உதவி 8 மாத நிலுவை தொகை ரூ.12 ஆயிரத்துக்கான காசோலையையும் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.
Related Tags :
Next Story