பிவண்டியில் சிறுமியை கற்பழித்து கொலை செய்த தொழிலாளி கைது
பிவண்டியில் சிறுமி பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் அவளை கற்பழித்து கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தானே,
தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் 7 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தாள். இவள் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டருகே விளையாடி கொண்டு இருந்தபோது, திடீரென மாயமானாள். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சிறுமி வீட்டருகே உள்ள புதரில் பிணமாக மீட்கப்பட்டாள்.
விசாரணையில் அவள் கற்பழித்து, பின்னர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை பிடிக்க 8 தனிப்படைகளை அமைத்தனர்.
இதில், சிறுமியின் உடல் மீட்கப்பட்ட சில மணி நேரத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த விசைத்தறி ஆலை தொழிலாளி பரத்குமார் கோரி(வயது30) என்பவரை கைது செய்தனர்.
கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை பிவண்டி பகுதியில் சிறிய ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த ஓட்டலுக்கு பரத்குமார் கோரி சாப்பிட வருவது வழக்கம்.
சம்பவத்தன்று வீட்டருகே விளையாடி கொண்டு இருந்த சிறுமியை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக கூறி பரத்குமார் கோரி அழைத்து சென்றார்.
இதில், அவர் சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று கற்பழித்து, பின்னர் கல்லால் தாக்கி கொலை செய்து உள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பரத்குமார் கோரியின் சொந்த ஊர் உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டியா மாவட்டம் ஆகும். அவர் பிவண்டி வார்ல்தேவி பகுதியில் தங்கியிருந்து விசைத்தறி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதர்கிடையே, ‘‘எனது மகளை கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கவேண்டும்’’ என சிறுமியின் தாய் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story