பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்


பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:30 PM GMT (Updated: 23 Dec 2019 7:49 PM GMT)

பெரம்பலூர் (தனி), குன்னம் சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சாந்தா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அப்போது கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2,89,732 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,62,876 வாக்காளர்களும் என மொத்தம் 5,52,608 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற தொடர் திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 622 ஆண் வாக்காளர்களும், 648 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டனர். இதேபோல் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 480 ஆண் வாக்காளர்களும், 542 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,927 ஆண் வாக்காளர்களும், 1,686 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,699 ஆண் வாக்காளர்களும், 1,468 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 5,48,121 வாக்காளர்கள்

தற்போது வெளியிடப் பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின் படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது 332 வாக்குசாவடிகள், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குசாவடிகள் என 652 வாக்குசாவடிகள் உள்ளன. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,40,441 ஆண் வாக்காளர்களும், 1,46,931 பெண் வாக்காளர்களும், 17 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,87,389 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,29,633 ஆண் வாக்காளர்களும், 1,31,088 பெண் வாக்காளர்களும், 11 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,60,732 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,48,121 வாக்காளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story