புதுச்சேரி பல்கலைக்கழகம் உலக தரத்துடன் வளர்ந்து வருகிறது - பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதம்


புதுச்சேரி பல்கலைக்கழகம் உலக தரத்துடன் வளர்ந்து வருகிறது - பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதம்
x
தினத்தந்தி 24 Dec 2019 5:00 AM IST (Updated: 24 Dec 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி பல்கலைக்கழகம் உலக தரத்துடன் வளர்ந்து வருகிறது என்று பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

புதுச்சேரி, 

புதுவை பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஜவகர்லால் நேரு அரங்கத்தில் நடந்தது. துணைவேந்தர் குர்மீத் சிங் வரவேற்று பேசினார்.

விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு 10 பேருக்கு தங்கப் பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் மற்றும் தங்கப் பதக்கத்தை 10 பேருக்கு வழங்கியுள்ளேன். அதில் 9 பேர் பெண்கள். ஒருவர்தான் ஆண். ஒட்டுமொத்தமாக தங்கப்பதக்கம் பெற்றுள்ள 189 பேரில் 137 பேர் பெண்கள்தான். 52 பேர் மட்டுமே ஆண்கள்.

இது எதிர்காலத்தை பிரதி பலிக்கிறது. பெண்களின் தலைமை பண்பையும் காட்டுகிறது. அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.

புதுச்சேரி என்பது கவிஞர்கள், தேசபக்தர்கள், தெய்வபக்தி நிறைந்தவர்களின் நிலமாகும். ஆன்மிகம் மற்றும் ஒப்பற்ற வளமான பாரம்பரியத்தின் கலவையாகவும், பிரான்ஸ் மற்றும் தமிழ் கலாசாரத்தின் சிறந்த சேர்க்கையாகவும் உள்ளது. பிரான்ஸ் நாட்டுடன் பல நூற்றாண்டு உறவுகளின் காரணமாக இந்த அழகிய நகரில் பிரெஞ்சு செல்வாக்கு உள்ளது. அது இங்குள்ள கட்டிடங்களிலும், தெருக்களிலும் கண்கூடாக தெரிகிறது. புதுச்சேரி உலகம் முழுவதும் அறியப்பட்டதற்கு மகான் அரவிந்தருக்கும், அன்னைக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

அமைதியையும், உள்ளார்ந்த மகிழ்ச்சியையும் தேடுகின்ற மக்களை உலகம் முழுவதிலும் இருந்து தொடர்ந்து ஈர்ப்பதாக அரவிந்தர் ஆசிரமமும், ஆரோவில்லும் உள்ளன. பாரதியார், பாரதிதாசன் போன்ற புரட்சிகர தமிழ் கவிஞர்களும் தங்களின் இறவாத கவிதைகளை எழுதியதும் புதுச்சேரியில்தான்.

இந்த பூமிக்கு நான் வருகை தந்தபோது எம்.பி.யாக புதுச்சேரியில் பயணம் மேற்கொண்ட காலத்தை நோக்கி எனது நினைவு செல்கிறது. எனது நண்பர் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த பரூக் மரைக்காயர் அப்போது தனது இல்லத்துக்கு என்னை தேனீர் அருந்த அழைத்திருந்தார். உயிரோட்டமான கலந்துரையாடலை நாங்கள் நடத்தினோம். அதிலிருந்து புதுச்சேரி மீதான எனது அன்பு காலந்தோறும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது.

பலதுறை படிப்பை ஊக்கப்படுத்த வழிகாட்டுதல் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை கொண்ட புதுச்சேரி பல் கலைக்கழகம் மத்திய பல் கலைக்கழகமாக 1985-ல் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டது. மாணவர்களின் தேவையை அதிகரிப்பதற்கான தன்மையுடனும், பல்வேறு தரத்துடனும், ஒட்டுமொத்த செயல்பாட்டுடனும் உலகத்தரத்திலான பல்கலைக்கழகமாக இது வளர்ந்து வருகிறது. மேலும் உயர்ந்த நிலையில் கற்பதற்குரிய மாணவர்களுக்கு உகந்த நிறுவனமாகவும் இது உள்ளது.

2019-20ம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட 6 ஆயிரத்து 500 மாணவர்களில் பாதி அளவினராக மாணவிகள் இருக்கிறார்கள் என்பது மனநிறைவினை அளிக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். மாணவர், ஆசிரியர் விகிதம் என்பது ஆரோக்கியமான முறையில் 16.7-க்கு ஒன்று என்று உள்ளது.

பல்கலைக்கழகமாக இருந்தாலும், வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் இறுதியில் நாம் அனைவரும் சமூகத்தின் அங்கமாக இருக்கிறோம். மேலும் சமூகத்துக்கு பொறுப்பானவர்களாக இருக்கிறோம். பெருநிறுவன சமூக பங்களிப்பு மூலமாக பெருநிறுவனங்கள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை சமூகத்திற்கு செலவிட அரசு ஊக்கப்படுத்தி இருக்கிறது. இந்த கோட்பாட்டை நான் பாராட்டுகிறேன். இது விரிவாக்கப்படும் என்று நம்புகிறேன். நமது பல்கலைக்கழகங்களின் கோட்பாடு விரிவாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி நான் அவ்வப்போது பேசி வருகிறேன். பெரு நிறுவன சமூக பொறுப்பிலிருந்து பல்கலைக்கழக சமூக பொறுப்பு என்று அழைக்கிறேன்.

இதுபற்றி நான் ஆர்வமாக இருக்கும் நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி இந்த திட்டத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிவைத்தார். இந்த மாநிலத்தில் கல்வி வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதில் முதல்-அமைச்சரும், மாநிலங்களவையில் எனது உடனிருந்த உறுப்பினரும் நல்ல நண்பருமான நாராயணசாமியின் பங்களிப்பை பாராட்டுகிறேன்.

ரத்ததானம், உறுப்புதானம், கண்பரிசோதனை, உடல்நல பரிசோதனை போன்ற சமூக சேவைகளை தொடங்கியது உள்பட குறிப்பிடத்தக்க சாதனைகளை இந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே பதிவு செய்துள்ளது. எனக்கு மன நிறைவை அளிக்கின்ற மற்றொரு விஷயமாக இருப்பது தூய்மையாகும். தூய்மை இந்தியா இயக்கத்தை தங்களின் வளாகத்தில் செயல்படுத்திய முதலாவது பல்கலைக்கழகமாக புதுச்சேரி பல் கலைக்கழகம் உள்ளது. இது விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் அளித்துள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகமும், அதன் இணைப்பு கல்லூரிகளும் சுற்றியுள்ள 103 கிராமங்களை தத்தெடுத்துள்ளன. இவற்றை முன்மாதிரி கிராமங்களாக மேம்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கிராமப்புற இளைஞர்களுக்கு உதவி செய்ய சமுதாயக்கல்லூரி ஒன்றை தொடங்குவது என்ற பல்கலைக்கழகத்தின் செயல் பாராட்டக்கூடியது. புதுவை பல்கலைக்கழக சமுதாயக்கல்லூரியி்ன் குறிக்கோள் திறன் உருவாக்கத்தின் மூலம் வேலைவாய்ப்புக்கான கல்வி என்பதாகும். உள்ளூர் சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் அடிப்படையில் கல்வி செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டு்ள்ளன.

புதுவை பல்கலைக்கழகம் தனது தரத்தை உயர்ந்த நிலையில் வைத்துள்ளது. அத்துடன் உலகில் சிறந்தவற்றுக்கு இணையான கல்விதரத்தை வழங்குவது அதன் விருப்பமாக உள்ளது. இந்த நோக்கத்திற்காக தைவான், பிரான்ஸ், கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுடன் இது கைகோர்த்துள்ளது. இதன் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் அறக்கட்டளை நிதியம் அமைக்கப்பட்டிருப்பது என் மனதுக்கு நெருக்கமான விஷயமாகும். முன்னாள் மாணவர்கள் தாராளமாக நன்கொடை வழங்குவது இந்த பல்கலைக்கழகம் விரும்பும் சிறந்தவற்றை செய்வதற்கான ஊக்கத்தை அளிக்கும்.

பட்டம் பெறுவது பசுமையாக நினைவில் தங்கும் நாளாகும். உங்களின் பெற்றோர்களுக்கும் கூட இது பெருமிதம் தரும் விஷயமாகும். உங்களில் சிலர் கூடுதலாக படிப்பை தொடரக்கூடும். சிலர் இந்த வளாக வாழ்க்கைக்கு நன்றி சொல்லிவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்கக்கூடும். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் இரக்கமும், தாராள குணமும் குறைவாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அதிகம் இரக்கமுள்ளவராகவும், தாராளமானவராகவும் இருக்க முயற்சி செய்தால் நிச்சயமாக சமநிலையை காணலாம்.

இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

விழாவில் ஜனாதிபதியின் மனைவி சவிதா, கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, வளர்ச்சி ஆணையர் அன்பரசு, கலெக்டர் அருண் உள்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story