ஏமாற்றி திருமணம் செய்து சொத்து அபகரிப்பு: முன்னாள் ராணுவவீரர் மீது 2-வது மனைவி புகார்


ஏமாற்றி திருமணம் செய்து சொத்து அபகரிப்பு: முன்னாள் ராணுவவீரர் மீது 2-வது மனைவி புகார்
x
தினத்தந்தி 24 Dec 2019 4:15 AM IST (Updated: 24 Dec 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த முன்னாள் ராணுவவீரர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேலூரில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெண் புகார் மனு அளித்தார். அவரை ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும்படி அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 2 புதிய மாவட்டங்கள் கடந்த மாதம் பிரிக்கப்பட்டன. அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கடந்த 9-ந் தேதி முதல் நடந்து வருகிறது. ஆனாலும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த சிலர் வழக்கம்போல வேலூரில் நடக்கும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்க வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வேலூரில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மாருதிநகரை சேர்ந்த குமார் மனைவி சித்ரா என்பவர் மனு ெகாடுக்க வந்தார். அந்த மனுவில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா எரும்பி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் குமாருக்கும், எனக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அவர் சென்னை பிராட்வேயில் உள்ள வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

குமார் ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் திருமணம் நடந்ததை மறைத்து 2-வதாக என்னை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் என்னுடன் குடும்பம் நடத்தியபோது எனது பெயரில் இருந்த வீடு, நகை, பணம் உள்ளிட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அபகரித்து விட்டார். தற்போது குமார் முதலாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். எனது சொத்துகளை தரும்படி கேட்டதற்கு அவா் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கிறார். எனவே குமார் மீது நடவடிக்கை எடுத்து, எனது வீடு, நகை, பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

சித்ரா, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அங்கு சென்று மனு அளிக்கும்படி அவரை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அதைத்தொடர்ந்து அவர் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.

Next Story