விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்காத தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்காத தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:30 PM GMT (Updated: 23 Dec 2019 8:37 PM GMT)

விடுதி மாணவர்களுக்கு உணவு வழங்காத தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தளி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் மகாதேவம்மா. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு விடுதி ஒன்றின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அந்த விடுதியில் சுமார் 100 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அந்த விடுதிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த மாணவ, மாணவிகளிடம் உணவுகள் சரியாக வழங்கப்படுகிறதா? என்று கேட்டனர். அதற்கு விடுதியில் தங்கி இருந்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு போதிய அளவு உணவு வழங்கப்படவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி கல்வித்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

பணியிடை நீக்கம்

இந்த தகவலை அறிந்த தலைமை ஆசிரியை மகாதேவம்மா விடுதிக்கு சென்று புகார் செய்த மாணவ, மாணவிகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் விடுதியின் சமையலர்கள் 3 பேருக்கு விடுப்பு கொடுத்து சென்றதாக தெரிகிறது. இதனால் மாணவ, மாணவிகள் 3 நாட்கள் உணவு சாப்பிட முடியாமல் சிரமப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து தலைமை ஆசிரியை மகாதேவம்மா தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.

ஆசிரியை, கல்வி அதிகாரி

அதே போல தளி அருகே மதகொண்டப்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கனிகா ஜெசி கிறிஸ்டி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளிக்கு சரியாக வராமலும், வகுப்புகளை நடத்தாமலும் இருந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் மீது புகார்கள் வந்தன. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் விசாரணை நடத்தி ஆசிரியை கனிகா ஜெசி கிறிஸ்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தளி வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன். இவர் மீது சொத்து குவித்ததாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வெங்கடேசனை பணி இறக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்தார். அதன்படி வெங்கடேசன் ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story