இளம்பிள்ளையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி சுகாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்


இளம்பிள்ளையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி சுகாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Dec 2019 4:30 AM IST (Updated: 24 Dec 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானதை தொடர்ந்து சுகாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இளம்பிள்ளை,

இளம்பிள்ளை பாட்டப்பன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் நிஷா (வயது 7). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி நிஷா, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தாள்.

சிறுமி பலியானதற்கு அந்த பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடு தான் காரணம் என்று அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். எனவே சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், ஏரியின் கரையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளையும், கோழிக்கழிவுகளையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் ஏரியில் கோழிக்கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரியும், சுகாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் பொதுமக்கள், நேற்று காலை இளம்பிள்ளை-காகாபாளையம் செல்லும் ரோட்டில் சந்தைப்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குப்பைகளை அகற்றி, சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக காலை 11.30 மணி முதல் 11.40 மணி வரை 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏரி

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் வசிக்கும் பகுதி, சந்தைப்பேட்டை ஏரியின் அருகில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் கோழிக்கழிவுகள், குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்களுக்கு நோய் பரவுகிறது. தற்போது நிஷா என்ற சிறுமி மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளாள். மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுகாதாரத்தை பாதுகாக்கவும், கோழிக்கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டோம் என்று தெரிவித்தனர். 

Next Story