மரக்காணம் அருகே, மீன்பிடி துறைமுகம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு


மரக்காணம் அருகே, மீன்பிடி துறைமுகம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு
x
தினத்தந்தி 24 Dec 2019 4:00 AM IST (Updated: 24 Dec 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே மீன்பிடி துறைமுகம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அழகன்குப்பம், வசவன்குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியார்குப்பம், மண்டவாய்புதுக்குப்பம், பனிச்சமேடு குப்பம், அனுமந்தைகுப்பம் உள்பட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

இதில் 1,013 மீனவர்கள் பைபர் படகுகளையும், 15 மீனவர்கள் விசைப்படகுகளையும், மற்ற மீனவர்கள் கட்டுமரங்களை பயன்படுத்தியும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் படகுகளை நிறுத்துவதற்கு மீன்பிடி துறைமுகம் இல்லை. இதனால் இங்குள்ள மீனவர்கள் அவர்களது படகுகளை கடற்கரை ஓரமாகவே நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் கடற்கரையோரம் பாதுகாப்பு இல்லாமல் படகுகளை நிறுத்தி வைப்பதால் கனமழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கடலில் இழுத்துச்செல்லப்படுவதால் மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இதனால் மரக்காணம் பங்கிங்காம் கால்வாயில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன்படி அழகன்குப்பம் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகளை மீன்வளத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இப்பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைய உள்ள இடத்தை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு அதற்கான வரைபடங்களை ஆய்வு செய்தார். அப்போது மரக்காணம் தாசில்தார் ஞானம், மீன் வளத்துறை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் சின்னகுப்பன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

Next Story