2020-ம் ஆண்டுக்கான வரைவு பட்டியல் வெளியீடு: கடலூர் மாவட்டத்தில் 20 லட்சத்து 56 ஆயிரம் 635 வாக்காளர்கள்


2020-ம் ஆண்டுக்கான வரைவு பட்டியல் வெளியீடு: கடலூர் மாவட்டத்தில் 20 லட்சத்து 56 ஆயிரம் 635 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 24 Dec 2019 3:15 AM IST (Updated: 24 Dec 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலின்படி 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 20 லட்சத்து 56 ஆயிரத்து 635 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் அன்புசெல்வன் கலந்துகொண்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2020-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லலிதா, கடலூர் கோட்டாட்சியர் ஜெயபிரகா‌‌ஷ், தேர்தல் தாசில்தார் பாலமுருகன், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், திமுக சார்பில் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் குணா, தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் லெனின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப், பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சுரே‌‌ஷ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2019-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த 26-3-2019 அன்று வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலின்படி மாவட்டத்தில் அப்போது 10 லட்சத்து 24 ஆயிரத்து 395 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 43 ஆயிரத்து 995 பெண் வாக்காளர்கள், 133 இதர வாக்காளர்கள் என மொத்தம் 20 லட்சத்து 68 ஆயிரத்து 523 வாக்காளர்கள் இருந்தனர். 2 ஆயிரத்து 300 வாக்குச் சாவடிகளும் இருந்தன.

பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி மாவட்டத்தில் கடந்த 1-9-2019 முதல் 6-12-2019 வரை உள்ள காலத்தில் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன. இதில் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட 13,003 மனுக்களில் 11,030 மனுக்கள் ஏற்கப்பட்டன, மீதமுள்ள மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல் பெயர் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட 23,484 மனுக்களில் 22,912 மனுக்கள் ஏற்கப்பட்டு, ஏனைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடி விசாரணை செய்யப்பட்டு இடம் பெயர்ந்த மற்றும் இறந்து போன வாக்காளர்கள் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இறந்துபோன வாக்காளர்கள் 9,284 பேர், இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 12,084 பேர், இரட்டை பதிவுள்ள வாக்காளர்கள் 1,550 பேர் என மொத்தம் 22 ஆயிரத்து 918 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள 2020-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலின்படி கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 20 லட்சத்து 56 ஆயிரத்து 635 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 948 ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 38 ஆயிரத்து 556 பெண் வாக்காளர்கள், 131 இதர வாக்காளர்கள் அடங்குவர்.

Next Story