குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து: தேசிய கீதம் பாடி, ரோஜாப்பூ கொடுத்து தார்வாரில் - நூதன ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து: தேசிய கீதம் பாடி, ரோஜாப்பூ கொடுத்து தார்வாரில் - நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:52 PM GMT (Updated: 23 Dec 2019 10:52 PM GMT)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய கீதம் பாடி, ரோஜாப்பூ கொடுத்து தார்வாரில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தார்வார்,

மத்திய அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

மங்களூரு, லக்னோ, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தார்வாரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதாவது தார்வார் கலெக்டர் அலுவலகம் முன்பு மனிதநேய அமைப்பாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு ரோஜாப்பூக்களை கொடுத்தும், தேசிய கீதம் பாடியபடியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் தார்வார் கலெக்டர் தீபாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு தீர்வு காண வேண்டும். மத்திய அரசு இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. சுமார் அரை மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story