குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து புதுமடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் புதுமடம் பஸ் நிலையத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு பிரதிநிதி செய்யது முகொஸ் தலைமை தாங்கினார். புதுமடம் சபீர் அலி, சிறுத்தை இபுராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டமைப்பின் ஆலிம்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும். மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக்கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது.
இந்த சட்ட திருத்தத்தின் மூலம் நாட்டிற்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அதில் முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்.
பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா சிக்கி தவிக்கிறது. ஜி.எஸ்.டி. போன்ற வரிகளால் வணிக நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் அதிகரித்திருக்கிறது. பாலியல் கற்பழிப்புகளால் உலக அரங்கில் பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா திகழ்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு அதைப்பற்றி சிறிதும் கவலையில்லாமல் மக்களை பிளவுபடுத்தும் சட்டம் இயற்றுவதன் மூலம் ஏழை மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடப்போவதில்லை. நாட்டின் வளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலம் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இல்லை. அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதே மத்திய அரசின் தற்போதைய சாதனையாக இருக்கிறது. ஹிட்லரின் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story