ஆம்பூர் அருகே, காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் - இழப்பீடு வழங்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை
ஆம்பூர் அருகே காட்டு யானைகள் மீண்டும் நிலத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்னவரிகம் பகுதியில் பெங்களமூளை வனப்பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 7 காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழை, நெல், பூஞ்செடி உள்ளிட்ட தோட்டங்களை சேதப்படுத்தின. மேலும் தென்னை, தேக்கு மரங்களை முறித்து தள்ளின.
10-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் புகுந்த யானை கூட்டம் அனைத்து பொருட்களையும் மிதித்து நாசப்படுத்தின. மேலும் அங்கு அறுவடை செய்து களத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த நெற்கதிர்களை மிதித்து சேதமாக்கியது. விவசாய நிலத்திற்குள் பொருத்தப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன குழாய்களையும், மின்கம்பங்களையும் சேதப்படுத்தியது.
காலை வழக்கம்போல தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்பூர் வனத்துறையினர் விரைந்து சென்று சேதப்பகுதிகளை பார்வையிட்டு யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.
விவசாய நிலங்களில் யானை புகுந்து பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதை அறிந்த ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் அப்பகுதிக்கு சென்று சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை வரவழைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டு அருகே மாச்சம்பட்டு பகுதியில் யானைகள் கூட்டம் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது. இதே யானைகள் கூட்டம் தான் தற்போது இப்பகுதிக்கு வந்துள்ளதாகவும், இந்த யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டி அடித்து விவசாய பயிர்களை காக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story