கேரளாவுக்கு சென்றுள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம்
கேரள மாநிலத்திற்கு சென்றுள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதுடன், காரையும் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
கேரள மாநிலத்திற்கு சென்றுள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதுடன், காரையும் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் எடியூரப்பா
முதல்-மந்திரி எடியூரப்பா ஒரு நாள் சுற்றுப்பயணமாக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளார். நாளை(வியாழக்கிழமை) சூரியகிரகணம் நடைபெறுவதையொட்டி ஜோதிடர்களின் ஆலோசனைப்படி கேரள மாநிலத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா சென்றுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மங்களூருவில் நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில், போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகி இருந்தனர். இந்த வன்முறையின் போது கேரள மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அத்துடன் வன்முறையில் ஈடுபட்டவர்கள் கேரள மாநிலத்தில் இருந்து வந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த நிலையில், கேரளா சென்றுள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வருகையை எதிர்த்து கண்ணூரில் நேற்று காலையில் எஸ்.எப்.ஐ. அமைப்பினர், கேரள மாநில மாணவர்கள் கூட்டமைப்பினர், அந்த மாநில இளைஞர் காங்கிரசார் ஆகியோர் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்-மந்திரி எடியூரப்பா சென்ற ரோட்டில் கருப்புக்கொடி காட்டி அவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.
கார் முற்றுகை
மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அத்துடன் முதல்-மந்திரி எடியூரப்பா சென்ற கார் மற்றும் அவரது பாதுகாப்புக்கு சென்ற வாகனங்களையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ஆனால் எடியூரப்பா சென்ற காரும், பாதுகாப்பு வாகனங்களும் அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல, திருவனந்தபுரம் விமான நிலையம் அருகேயும் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் 20 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story