செல்போனில் போட்டோ எடுத்ததை தட்டிக்கேட்ட கல்லூரி பேராசிரியைக்கு கொலை மிரட்டல் - கட்டிட தொழிலாளி கைது


செல்போனில் போட்டோ எடுத்ததை தட்டிக்கேட்ட கல்லூரி பேராசிரியைக்கு கொலை மிரட்டல் - கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 25 Dec 2019 3:30 AM IST (Updated: 24 Dec 2019 11:54 PM IST)
t-max-icont-min-icon

செல்போனில் போட்டோ எடுத்ததை தட்டிக்கேட்ட பேராசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை,

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் வீட்டில் இருந்து பஸ்நிறுத்தத்துக்கு செல்லும்போது கடந்த ஒருவாரமாக இவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று செல்போனில் போட்டோ எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது அந்த பேராசிரியைக்கு தெரியவந்தது. எனவே இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 22-ந் தேதி பேராசிரியை, தனது தந்தையுடன் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது அந்த வாலிபர், பேராசிரியையை பின்தொடர்ந்து வந்து செல்போனில் போட்டோ பிடித்ததாக தெரிகிறது. இதனை பேராசிரியையும், அவரது தந்தையும் தட்டிக்கேட்டனர். அதற்கு அந்த வாலிபர் அவர் அழகாக இருப்பதால் செல்போனில் போட்டோ எடுக்கிறேன் என்று கூறியதுடன், அவர்கள் இருவருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேராசிரியையின் தந்தை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். பின்னர் போட்டோ எடுத்து மிரட்டிய வாலிபரை பிடிப்பதற்காக மறுநாள் அந்த பேராசிரியையை வழக்கம்போல் பஸ்நிறுத்தத்துக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அவர் பஸ்நிறுத்தம் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் மீண்டும் தனது செல் போனில் பேராசிரியையை போட்டோ எடுத்தார்.

இந்த நேரத்தில் அங்கு சாதாரண உடையில் மறைந்து இருந்த போலீசார் விரைந்து சென்று வாலிபரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (23) என்பதும், கோவை ராமநாதபுரம் கருப்புராயன்கோவில் வீதியில் அறைஎடுத்து தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story