குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு, ரேவண்ணா கோரிக்கை
குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, ரேவண்ணா கோரிக்கை விடுத்து உள்ளார்.
ஹாசன்,
குடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, ரேவண்ணா கோரிக்கை விடுத்து உள்ளார்.
எடியூரப்பா யோசிக்கிறார்
ஹாசனில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசின் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மங்களூருவில் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார். ஆனால் சி.ஐ.டி. விசாரணை நடத்தினால் உண்மை வெளியே வராது.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கி சூடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடும் விஷயத்தில் எடியூரப்பா மிகவும் யோசிக்கிறார். அவர் யாரை காப்பாற்ற இப்படி செயல்படுகிறார் என்று தெரியவில்லை. எந்த அடிப்படையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது என்று தெரியவில்லை. இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஹாசனில் வருகிற 28-ந் தேதி ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும் வரை கர்நாடகத்தில் இந்த சட்டத்தை மாநில அரசு அமல்படுத்த கூடாது.
மறுபரிசீலனை செய்ய வேண்டும்
மங்களூருவில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடியோவை போலீசார் வெளியிட்டு உள்ளனர். 3 நாட்கள் கழித்து தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மங்களூரு கலவரத்திற்கு முன்னாள் மந்திரி யு.டி.காதர் தான் காரணம் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். அவர் மீது எந்த தவறும் இல்லை.
மதத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய கூடாது. மங்களூரு துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியான விவகாரம் தொடர்பாக மாநில அரசை கண்டித்து சட்டசபையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்தும். எடியூரப்பா ஆட்சிக்கு வரும் போது எல்லாம் மாநிலத்தில் துப்பாக்கி சூடு நடக்கிறது. அப்போது விவசாயிகள் மீது குண்டு பாய்ந்தது. தற்போது அப்பாவி மக்கள் மீது பாய்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனை தடுக்க குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story