ரூ.2 கோடி வரை மோசடி: திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை


ரூ.2 கோடி வரை மோசடி: திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 25 Dec 2019 3:30 AM IST (Updated: 25 Dec 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

ரூ. 2 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசை குண்டுமேடு எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 50). இவரது மனைவி ஈஸ்வரி (வயது 47). கணவன், மனைவி இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியில் தங்க நகை சீட்டு மற்றும் மாத சீட்டு நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களிடம் தங்க நகை சீட்டில் சேர்ந்து மாதம் ரூ.500, ரூ.600, ரூ.700 என செலுத்தி வந்தால் முடிவில் 2 கிராம் தங்கம், 30 கிராம் வெள்ளி, பட்டாசு பெட்டி ஒன்று, இனிப்பு பெட்டி ஒன்று தருவதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து குண்டுமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் இந்த தங்க நகை சீட்டில் சேர்ந்து மாதம் தோறும் தவறாமல் பணம் செலுத்தி வந்தனர்.

மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் அவர்களிடம் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் வரை மாத சீட்டில் சேர்ந்து மாதம்தோறும் பணம் செலுத்தி வந்தனர்.

கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இருவரும் தங்க நகை சீட்டு, மாதாந்திர சீட்டில் சேர்ந்தவர்களுக்கு சரியான முறையில் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் பணத்தை தருவதாக கூறியுள்ளனர். இருப்பினும் அவர்கள் கூறியதுபோல் பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஈஸ்வரியை அழைத்து விசாரித்தபோது அவர் பணத்தை சிறிதுசிறிதாக தருவதாக கூறியுள்ளார். இவ்வாறாக அவர்கள் தங்க நகை சீட்டு மற்றும் மாத சீட்டு செலுத்திய சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.2 கோடிவரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவர்களை அணுகி கேட்டபோது அவர் முதல்கட்டமாக ரூ. 15 லட்சம் தருவதாக கூறி அதற்கான காசோலையை கொடுத்துள்ளனர். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது அந்த காசோலைக்கு பணம் கொடுக்க வேண்டாம் என வங்கிக்கு ஈஸ்வரி கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தையும் எடுக்க முடியவில்லை.

மேலும் ஈஸ்வரி தனது கணவருடன் திடீரென மாயமாகி விட்டார். இதை அறிந்த பாதிக்கப்பட்ட குண்டுமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கையில் தங்க நகை சீட்டு மற்றும் மாத சீட்டு வைத்திருந்தனர். மோசடியில் ஈடுபட்ட ஈஸ்வரி அவரது கணவர் உமாபதி ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங் களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் தலைமையில் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் நேற்று திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story