குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: கடையநல்லூரில் முஸ்லிம்கள் பேரணி 200 மீட்டர் நீள தேசிய கொடியை ஏந்திச்சென்றனர்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: கடையநல்லூரில் முஸ்லிம்கள் பேரணி 200 மீட்டர் நீள தேசிய கொடியை ஏந்திச்சென்றனர்
x
தினத்தந்தி 25 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லூரில் முஸ்லிம்கள் நேற்று பேரணி நடத்தினார்கள்.

கடையநல்லூர், 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லூரில் முஸ்லிம்கள் நேற்று பேரணி நடத்தினார்கள். மேலும் 200 மீட்டர் நீள தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.

பிரமாண்ட பேரணி

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முஸ்லிம்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நேற்று நடைபெற்றது.

கடையநல்லூர் பகுதியில் உள்ள 63 பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஐக்கிய ஜமாத் என்ற பெயரில் இந்த பேரணியை நடத்தியது. பேரணியானது மதியம் 2 மணிக்கு ரகுமானியாபுரம் 1-வது தெருவில் இருந்து தொடங்கி பேட்டை காதர் முகைதீன் பள்ளிவாசல், சந்தை தெரு, நடு அய்யாபுரம், பிலால் பள்ளிவாசல், அல்லி மூப்பன் தெரு, பெரியதெரு வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் சென்று மணிக்கூண்டு அருகே நிறைவு பெற்றது.

தேசிய கொடி

அப்போது, பேரணியில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேலும் பேரணியின் கலந்து கொண்டவர்கள் 200 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு சென்றனர். கடையநல்லூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

இந்த பேரணியையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஓம்பிரகா‌‌ஷ் மீனா (நெல்லை), சுகுணாசிங் (தென்காசி) உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story