தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதி மீறியதாக 14 புகார்கள் வந்துள்ளன கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதி மீறியதாக 14 புகார்கள் வந்துள்ளன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதி மீறியதாக 14 புகார்கள் வந்துள்ளன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதற்காக மொத்தம் 1,818 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குச்சீட்டுகள் வைக்கப்படும் பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் 12 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆய்வு
இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி, வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டார். அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. 27-ந் தேதி 7 யூனியன்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன. வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. அந்தந்த யூனியன்களுக்கு வாக்குச்சீட்டு மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2 கட்ட பயிற்சி முடிக்கப்பட்டு உள்ளது. 12 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
14 புகார்கள்
மண்டல குழுக்கள் நாளை (வியாழக்கிழமை) காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டி மற்றும் பொருட்களை கொண்டு செல்வார்கள். பூத் சிலிப் வினியோகம் செய்யும் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கட்டுப்பாட்டு அறைக்கு 14 புகார்கள் வந்து இருந்தன. குறிப்பாக சுவர்களில் விளம்பரம் எழுதுதல், அரசு, பொதுச்சுவர்களில் விளம்பரம் எழுதுதல் போன்ற புகார்கள் வந்து உள்ளன. உடனடியாக பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உரிய நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story