உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு, வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்ல 93 போலீஸ் குழுக்கள்


உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு, வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்ல 93 போலீஸ் குழுக்கள்
x
தினத்தந்தி 25 Dec 2019 4:00 AM IST (Updated: 25 Dec 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு 93 போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் தலா 7 ஊராட்சி ஒன்றியங்கள் வீதம் இருகட்டங்களாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மற்றும் 30-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் திண்டுக்கல், சாணார்பட்டி, நத்தம், ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய 7 ஒன்றியங்களில் முதல்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 27 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் 1,160 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த வாக்குச்சாவடிகள் 93 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 10 முதல் 12 வாக்குச்சாவடிகள் வரை இடம்பெற்றுள்ளன.

அதேபோல் வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் உள்பட வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தயாராக இருக்கின்றன. மேலும் அவை மண்டல வாரியாக பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) வாக்குச்சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்டவை பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதற்காக 93 மண்டலங்களுக்கும் தலா ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த போலீஸ் குழுவின் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், தேர்தல் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோதா ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினர்.

அப்போது நாளை அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆஜராக வேண்டும். வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளில் கொண்டு சேர்க்க வேண்டும். அதேபோல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும், வாக்குப்பெட்டிகளை சேகரித்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரவேண்டும். இதற்காக தயாரிக்கப்பட்ட வரைபடம் மூலம் திட்டமிட்டப்படி பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Next Story