ஹவாலா பணம் கொண்டு சென்றதை போலீசில் காட்டிக்கொடுத்ததால் ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 குருவிகள் கைது


ஹவாலா பணம் கொண்டு சென்றதை போலீசில் காட்டிக்கொடுத்ததால் ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 குருவிகள் கைது
x
தினத்தந்தி 25 Dec 2019 3:45 AM IST (Updated: 25 Dec 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஹவாலா பணத்தை கொண்டு சென்றதை ஆட்டோ டிரைவர் போலீசில் காட்டிக்கொடுத்ததால், ஆத்திரம் அடைந்த 3 குருவிகள் அவரை தாக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூர், கொச்சின், சென்னை உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் அடிக்கடி வந்து செல்லும் பயணிகள் பலர் தங்கம், வெள்ளி, மின்னணு பொருட்கள், ஹவாலா பணம் போன்றவற்றை கமிஷன் அடிப்படையில் கடத்தி வருவது வழக்கம். இவ்வாறு கடத்தி வருபவர்களை குருவிகள் என்று அழைப்பார்கள்.

ஆட்டோவில் சவாரி

இந்த நிலையில் திருச்சி உறையூர் பெஸ்கிநகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 56). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் கடந்த 22-ந் தேதி நள்ளிரவு விமான நிலையம் அருகில் இருந்து 3 பேர் சவாரி செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக பணம் இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமணன், இதுபற்றி திருச்சி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்து, தான் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருப்பதாக கூறினார். உடனே நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, சுப்பிரமணியபுரம் அருகே அந்த ஆட்டோவை மடக்கினார்கள்.

ஹவாலா பணம்

பின்னர் ஆட்டோவில் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நாகை மாவட்டம் ஜாமலியா பகுதியை சேர்ந்த ஹசன் ஹூசைன்(40), யானன்குடியை சேர்ந்த ஜக்குபார் சாதிக்(வயது44) மற்றும் ஹாஜா‌ ஷாகீர் உசேன் என்ற ராஜா முகமது(45) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் வைத்திருந்த பையில் ரூ.5 லட்சத்து 14 ஆயிரத்து 900 கட்டு, கட்டாக இருந்தது. ஆனால் அவர்களிடம் அந்த பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லை. அது ஹவாலா பணம் என்று தெரியவந்தது. அத்துடன் அவர்கள் விமான நிலையத்தில் வேலை பார்ப்பதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் தங்கம், ஹவாலா பணம் கடத்தும் குருவிகளாக செயல்பட்டு வந்ததாக தெரியவந்தது.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து 3 பேரையும் கே.கே.நகர் போலீசில் ரோந்து போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்புக்கரசு வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்ததுடன், ஹவாலா பணத்தையும் பறிமுதல் செய்தார். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மன்னார்புரம் அருகே ஆட்டோவில் வந்துகொண்டிருந்த லட்சுமணனை ஜாக்குபர் சாதிக், ஹாசன்ஹூசைன் மற்றும் ஹாஜா‌ ஷாகீர் உசைன் ஆகிய 3 பேரும் வழிமறித்து, தங்களை இவன்தான் காட்டிக்கொடுத்தான் என்று கூறி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசில் ஆட்டோ டிரைவர் லட்சுமணன் புகார் கொடுத்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார், ஜாக்குபர் சாதிக், ஹாசன்ஹூசைன் மற்றும் ஹாஜா‌ ஷாகீர் உசைன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story