வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - மாவட்ட தேர்தல் அலுவலரிடம் எ.வ.வேலு எம்.எல்.ஏ. மனு
வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமியிடம் எ.வ.வேலு எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமியை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அப்போது சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார் மற்றும் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.
பின்னர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். நமது மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள், கூடுதல் பாதுகாப்பு குறித்து மாவட்ட கலெக்டரிடம் செய்ய கூறியுள்ளோம். கடந்த முறை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது வாக்கு எண்ணிக்கைக்காக அந்தந்த ஒன்றியங்களில் திருமண மண்டபம், பள்ளிகள் போன்ற இடங்களில் வாக்கு எண்ணிக்கைக்காக ஏற்பாடு செய்தனர்.
வாக்கு எண்ணிக்கைகள் நடைபெற்றது. அப்போது பல சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டது. சென்ற முறை போல் இந்த முறை வாக்கு எண்ணிக்கையில் எந்தவிதமான சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாதவாறு இருக்க வேண்டும்.
ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர்களுக்கான வெற்றி பெற்ற சான்றினை உடனடியாக கொடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் இந்த முறை நாங்கள் ஆன்லைன் மூலம் உடனடியாக வெற்றியினை அறிவித்து விடுவோம் என்றார்.
அவரிடம் நான் ஆன்லைன் இருந்தாலும் பரவாயில்லை, அந்த சமயத்தில் நெட்வொர்க் சரியாக கிடைக்காமல் போய்விட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். அதனால் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல், நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு எப்படி உடனடியாக வெற்றி பெற்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பீர்களோ, அதேபோல இந்த தேர்தலுக்கும் செய்யுங்கள் என்று கூறியுள்ளேன். அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தியையும் அவரது அலுவலகத்தில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து, வாக்கு பதிவின் போதும், வாக்குப்பெட்டி வைக்கும் அறை பாதுகாப்பு, வாக்கு எண்ணிக்கையின் போதும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story