பணம் செலுத்தினால் கடன் தருவதாக விளம்பரப்படுத்தி, 27 நாட்களி்ல் பொதுமக்களிடம் ரூ.3 கோடி சுருட்டிய நிதி நிறுவனம் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று தங்களிடம் பணம் செலுத்தினால் தனிநபர் கடன் தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி 27 நாட்களில் ரூ.3 கோடி சுருட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி் நீலமங்கலம் கூட்டுரோட்டில் கடந்த நவம்பர் மாதம் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் ஒன்று அதன் கிளை அலுவலகத்தை தொடங்கியது.
இந்த நிதி நிறுவனத்தில் மேலாளராக அருள் என்பவரும், 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களும் பணியாற்றினார்கள். இவர்கள் இந்த நிதி நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் கிளை உள்ளதாகவும், மகளிர் சுய உதவி குழு கடன் மற்றும் தனி நபர் கடன் என ரூ.50 ஆயிரம் முதல் ரூ.15 லட்சம் வரை கடன் வழங்க உள்ளதாகவும் கூறி நீலமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள நிறைமதி, தென்கீரனூர், மலைக்கோட்டாலம், வரஞ்சரம், முடியனூர், ரிஷிவந்தியம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட. கிராமங்களில் துண்டுபிரசுரங்களை வழங்கி விளம்பரப்படுத்தினார்கள்.
இதனை நம்பி மகளிர் சுயஉதவிக்குழுவினரும், தனிநபர்களும் அந்த தனியார் நிதி நிறுவனத்தை அணுகிய போது, மகளிர் சுயஉதவிக்குழுவினர் கடன் பெற விரும்பினால் குழு உறுப்பினர்கள் 10 பேர் இருந்தால் ஒவ்வொருவரும் தலா ரூ.1,500 வீதம் செலுத்தினால் 4 லட்சத்து,50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும் எனவும் தனிநபர் கடனுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு ரூ.6 ஆயிரம் வீதம் கடன் தொகைக்கு ஏற்ப 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். இந்த பணத்தை கடந்த 23-ந்தேதிக்குள் கட்டினால் அன்றைய தினத்தில் கடன்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
இதனை நம்பி ஏறக்குறைய 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டினார்கள். அந்த வகையில் சுமார் 3 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளனர். ஆனால் அந்த நிதி நிறுவனத்தினர் கூறியபடி 23-ந்தேதி(நேற்றுமுன்தினம்) வாடிக்கையாளர் வங்கி கணக்கில் கடன் தொகையை செலுத்தாமல் நிதி நிறுவனத்தை இழுத்து மூடி விட்டு வசூல் பணத்துடன் தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் நிதிநிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள், தங்கள் வங்கி கணக்கில் 23-ந்தேதிக்குள் பணம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிதி நிறுவனம் தொடங்கிய 27 நாட்களே ஆகிறது. அதற்குள் பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி சுமார் 3 கோடி ரூபாயை சுருட்டி விட்டு சென்று விட்டது. நிதி நிறுவனத்தில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களி்ல் 500 பேர் நேற்று அந்த நிறுவனத்துக்கு சென்று பார்த்த போது பூட்டிக்கிடந்ததால் ஏமாற்றத்துடன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். இதனால் கள்ளக்குறிச்சியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story