மாஞ்சோலைக்கு பஸ் மேற்கூரை மீது அமர்ந்து செல்லும் பயணிகள் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை


மாஞ்சோலைக்கு பஸ் மேற்கூரை மீது அமர்ந்து செல்லும் பயணிகள் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 24 Dec 2019 10:30 PM GMT (Updated: 24 Dec 2019 8:42 PM GMT)

மாஞ்சோலைக்கு பஸ் மேற்கூரை மீது அமர்ந்து பயணிகள் பயணம் செய்கிறார்கள். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை விடுத்தனர்.

நெல்லை, 

மாஞ்சோலைக்கு பஸ் மேற்கூரை மீது அமர்ந்து பயணிகள் பயணம் செய்கிறார்கள். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை விடுத்தனர்.

பஸ் நிறுத்தம்

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே மாஞ்சோலை மலைப்பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி, மாஞ்சோலை, கோதையாறு ஆகிய 5 தோட்டப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இயக்கப்பட்டு வந்த பஸ்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

சமீப காலமாக 3 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அதிலும் ஒரு பஸ் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாஞ்சோலையில் இருந்து அம்பை, தென்காசி, நெல்லை பகுதிக்கு வந்து செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்கூரை மீது பயணம்

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு நெல்லையில் இருந்து மாஞ்சோலை ஊத்து பகுதிக்கு ஒரு பஸ் புறப்பட்டது. கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை காலம் என்பதால் இந்த பஸ்சில் அதிகமான பயணிகள் ஏறினர். கல்லிடைக்குறிச்சி பகுதியில் வந்த போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதை கண்ட போலீசார், அனைவரையும் பஸ்சுக்குள் பத்திரமாக நிற்குமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடிக்கு பஸ் வந்த போது பஸ்சுக்குள் இருந்த பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். அதாவது 45 பேர் அமரும் வகையிலான இருக்கைகள் கொண்ட பஸ்சில், 150 பேர் பயணம் செய்தனர். அப்போது பஸ்சின் கதவு திறந்து கொண்டதால், படிக்கட்டில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் பஸ்சை விட்டு கீழே இறங்கினர்.

பின்னர் அவர்கள் வேறு வழியின்றி மாஞ்சோலைக்கு போய் சேர வேண்டிய கட்டாயத்தாலும், அதன் பிறகு வேறு பஸ் இல்லாததாலும், பஸ்சின் மேற்கூரையில் ஏறி அமர்ந்தனர். இதனால் பஸ் மெதுவாக ஊர்ந்து மாலை 5 மணிக்கு மாஞ்சோலைக்கு செல்ல வேண்டிய பஸ் 6 மணிக்கு சென்றடைந்தது.

மீண்டும் இயக்க வேண்டும்

இதுபற்றி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘மாஞ்சோலை ரோடு மோசமாக இருப்பதாக கூறி பஸ்சை நிறுத்துகின்றனர். எனவே ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் பொங்கல் காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அதாவது தென்காசியில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு அம்பை, மணிமுத்தாறு வழியாக மாலை 4 மணிக்கு மாஞ்சோலை ஊத்து சென்று மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு நெல்லைக்கு செல்லும் பஸ் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். தொழிலாளர்களின் பரிதாப நிலையை எண்ணிப்பார்த்து கூடுதல் பஸ்களை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Next Story