கடற்கரை சாலையில் காைர விட்டு இறங்கி பொது மக்களுக்கு கைகாட்டிய ஜனாதிபதி


கடற்கரை சாலையில் காைர விட்டு இறங்கி பொது மக்களுக்கு கைகாட்டிய ஜனாதிபதி
x
தினத்தந்தி 25 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

புதுவை கடற்கரை சாலையில் காரை விட்டு இறங்கி பொதுமக்களை பார்த்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையசைத்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரிக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் வந்தார். புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் மாலையில் அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் ஆகியவற்றை பார்வையிட்டார்.

இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை அவர் காரைக்கால் புறப்பட்டு சென்றார். ஜனாதிபதி கடற்கரை சாலை வழியாக செல்கிறார் என்பதை அறிந்த சுற்றுலா பயணிகள் பலர் கடற்கரை சாலையில் கூடினார்கள். அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். இருந்தாலும் பலர் கடற்கரை சாலையிலேயே கூடியிருந்தனர்.

காரில் இருந்து இறங்கினார்

இந்தநிலையில் கவர்னர் மாளிகையிலிருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காரில் புறப்பட்டு புதுவை விமான நிலையம் நோக்கி சென்றார். அவரது காருக்கு முன்னும், பின்னும் பாதுகாப்புப் படை வீரர்கள் காரில் சென்றனர்.

ஜனாதிபதியின் காரில் அவருடன் கவர்னர் கிரண்பெடியும் உடனிருந்தார். அந்த கார் கவர்னர் மாளிகையிலிருந்து வந்து கடற்கரை சாலையில் திரும்பியபோது திடீரென நின்றது.

உடனே பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சியுடன் இறங்கி ஓடிவந்தனர். அப்போது ஜனாதிபதி தனது காரை விட்டு இறங்கி வெளியே வந்து அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தார். தனது கட்டை விரலை உயர்த்திக் காட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். பதிலுக்கு மக்களும் அவரை பார்த்து கையசைத்தனர். சிலர் தங்கள் செல்போனில் அவரை படம் பிடித்தனர்.

ஒரு சில வினாடிகளே பொதுமக்களை பார்த்து கையசைத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பின்னர் காரில் ஏறி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் சென்றார்.

அவருடன் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் சென்றனர்.

Next Story