சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - தயார்நிலையில் ஓட்டுப்பெட்டிகள்


சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - தயார்நிலையில் ஓட்டுப்பெட்டிகள்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:45 PM GMT (Updated: 24 Dec 2019 9:42 PM GMT)

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓட்டுப்பெட்டிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சிவகாசி, 

சிவகாசி ஒன்றியத்தில் தற்போதைய நிலவரப்படி 92,729 ஆண் வாக்காளர்களும், 97,577 பெண் வாக்காளர்களும், 23 திருநங்கைகளும் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் 54 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் 54 தலைவர்கள்பதவிகள் உள்ளன. மேலும் இந்த 54 பஞ்சாயத்துகளில் 429 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளும் உள்ளன. மேலும் மாவட்ட பஞ்சாயத்துக்கு தேவையான 3 உறுப்பினர்கள் இந்த ஒன்றியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் இந்த முறை அனைத்து மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 54 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 342 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இதில் 339 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 96 பேர் தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். தற்போது 243 பேர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

அதேபோல் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 1,344 பேர் போட்டியிட்டனர். இதில் 32 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 61 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். 88 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது 429 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கு 1,163 பேர் களத்தில் உள்ளனர்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 289 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 6 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 95 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். தற்போது 188 பேர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

அதேபோல் 3 மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்கு 29 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் ஒருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 5 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். தற்போது 3 மாவட்ட பஞ்சாயத்து பதவிக்கு 23 பேர் போட்டியிடுகிறார்கள்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊரக பகுதியில் வருகிற 27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இங்குள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 326 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 15 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை அனுப்ப அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

குறிப்பாக ஓட்டுப்பதிவின்போது அதிகாரிகள் பயன்படுத்தும் 26 பொருட்களை வாக்குப்பெட்டியுடன் சேர்த்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள இ-சேவை மையத்தில் அந்த பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அமைதியாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story