வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, அம்மா உணவகத்தில் மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு


வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, அம்மா உணவகத்தில் மாநகராட்சி கமிஷனர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Dec 2019 4:00 AM IST (Updated: 25 Dec 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ருசியாக சமைக்கும்படி உத்தரவிட்டார்.

வேலூர், 

வேலூர் மாநகராட்சியில் கலெக்டர் அலுவலகம் அருகே, அலமேலுமங்காபுரம், அண்ணாசாலை, கஸ்பா, வேலப்பாடி, காட்பாடி உள்பட 10 இடங்களில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. ஏழை எளிய மக்களின் வயிற்றுப்பசியை போக்க திறக்கப்பட்ட இந்த உணவகத்தில் ரூ.1-க்கு இட்லியும், ரூ.3-க்கு தயிர்சாதமும், ரூ.5-க்கு சாம்பார் சாதமும் விற்பனை செய்யப்படுகிறது.

அம்மா உணவகங்கள் திறக்கப்பட்ட சமயத்தில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை. உணவை ருசியாக சமைத்து வழங்க வேண்டும் என்றும், அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த சமையல் பொருட்கள், காய்கறிகள் மற்றும் மதிய உணவிற்காக சமைக்கப்பட்டிருந்த சாம்பார் சாதத்தை பார்வையிட்டார்.

பின்னர், அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தினமும் ருசியாக சமைக்க வேண்டும், உணவகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையலுக்கு தரமான காய்கறிகள், மளிகை பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று மகளிர் குழுவினருக்கு, கமிஷனர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து அவர், சத்துவாச்சாரியில் உள்ள கோர்ட்டு வளாகம் சுத்தப்படுத்தும் பணியையும், 2-வது மண்டல அலுவலகத்தில் நடந்து வரும் திடக்கழிவு மேலாண்மை பணியையும் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி நலஅலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story