‘ஈழத்தமிழர்கள் இலங்கை செல்லவே விரும்புகின்றனர்’ இல.கணேசன் பேட்டி


‘ஈழத்தமிழர்கள் இலங்கை செல்லவே விரும்புகின்றனர்’ இல.கணேசன் பேட்டி
x
தினத்தந்தி 24 Dec 2019 10:00 PM GMT (Updated: 24 Dec 2019 11:25 PM GMT)

ஈழத்தமிழர்கள் இலங்கை செல்வதையே விரும்புகின்றனர் என்று இல.கணேசன் கூறினார். பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் இல.கணேசன் நேற்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை, 

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவை பொறுத்தவரை பா.ஜனதா கட்சி 33.5 சதவீத வாக்குகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம் என்று பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. தற்போது இந்த சட்டம் நாடாளுமன்ற இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்திய சட்டத்துக்கு எதிராக போராடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. இந்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணி தேவையற்றது. ஒன்றும் இல்லாத விஷயத்தை எல்லாம் ஸ்டாலின் ஊதி பெரிதாக்குகிறார். தவறான கருத்துகளை சொல்லி மக்களை தூண்டி விடுகிறார்.

இலங்கை தமிழர்கள் குடியுரிமை கேட்டால் கொடுக்கலாம். தவறில்லை. ஆனால் அவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லும் உரிமையை தான் கேட்கிறார்கள். புதுவையில் ஜனாதிபதி நிகழ்ச்சியில் பதக்கம் வேண்டாம் என்று மாணவி நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மதுரை மாவட்டத்தில் கணிசமான இடங்களில் பா.ஜனதா கட்சி உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். அனைவரும் அப்பகழுக்கற்றவர்கள். 24 மணி நேரமும் மக்கள் பணியாற்றுவார்கள் என நான் உறுதி கூறுகிறேன்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து நாடு முழுவதும் பா.ஜனதா சார்பில் விளக்க கூட்டம் நடத்தப்படும். இந்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அந்நியர் வேறு, இந்தியர் வேறு என்ற நிலையில் பொதுமக்கள் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story