திண்டுக்கல்லில் பரபரப்பு: தலையில் கல்லை போட்டு மூதாட்டி கொலை - பேரன் கைது


திண்டுக்கல்லில் பரபரப்பு: தலையில் கல்லை போட்டு மூதாட்டி கொலை - பேரன் கைது
x
தினத்தந்தி 26 Dec 2019 4:15 AM IST (Updated: 25 Dec 2019 7:37 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், தலையில் கல்லை போட்டு மூதாட்டியை கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் குள்ளனம்பட்டி ஜீவாநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மனைவி ராமாயி (வயது 82). இவர்களது மகன் கோவிந்தராஜ். இவருக்கு திருமணமாகி மணிகண்டன் (23) என்ற மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணி இறந்துவிட்டார். இதையடுத்து ராமாயி தனது மகன் குடும்பத்தினருடன் சேர்ந்து வசித்து வந்தார். ராமாயியும், கோவிந்தராஜூவும் கூலி வேலை செய்தனர். மணிகண்டன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

மேலும் இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. அவ்வப்போது தனது பாட்டியிடம் பணம் வாங்கி மதுகுடித்து வந்துள்ளார். ராமாயி உள்பட 3 பேரும் இரவில், அப்பகுதியில் உள்ள டீக்கடை முன்பு இருக்கும் காலியிடத்தில் படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவும் 3 பேரும் ஒன்றாக தூங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்த மணிகண்டன், பாட்டியிடம் மதுகுடிக்க பணம் தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால் ராமாயி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஓடிச்சென்று சாலையோரத்தில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து மூதாட்டியின் தலையில் போட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதற்கிடையே தூக்கத்தில் இருந்து எழுந்த கோவிந்தராஜ் தனது தாய் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது மகனை பிடிக்க முயன்றார். அப்போது அவரையும் கல்லால் தாக்கிவிட்டு மணிகண்டன் தப்பிச்சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கோவிந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராமாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பஸ் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story