பணம் வைத்து சூதாட்டம்: போலீசுக்கு பயந்து மாடியில் இருந்து குதித்தவர் சாவு


பணம் வைத்து சூதாட்டம்: போலீசுக்கு பயந்து மாடியில் இருந்து குதித்தவர் சாவு
x
தினத்தந்தி 25 Dec 2019 10:30 PM GMT (Updated: 25 Dec 2019 3:03 PM GMT)

பணம் வைத்து சூதாட்டம் நடத்தியபோது போலீஸ் விரட்டியதால், பயந்து போய் மாடியில் இருந்து குதித்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பாலகிருஷ்ணன் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஒரு தொழிற்சாலையின் மாடியில் தனியாருக்கு சொந்தமான சூதாட்ட கிளப் உள்ளது. அங்கு சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும், இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த சூதாட்ட கிளப்புக்கு சென்றனர். அங்கு அனுமதி இன்றி செயல்பட்ட அந்த சூதாட்ட கிளப்பில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

போலீசாரை கண்டதும், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினார்கள். அதில் ஒருவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, முதல் மாடியில் இருந்து குதித்தபோது கீழே உள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையின் மேற்கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தார்.

இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பீட்டர்(வயது 45), செழியன்(33), ராஜி (32), ராஜசேகர் (41) ஆகிய 4 பேரை மட்டும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தனர்.

இதையடுத்து தொழிற்சாலைக்குள் விழுந்தவரை பிடிக்க போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசுக்கு பயந்து மாடியில் இருந்து குதித்த அவர், பரிதாபமாக இறந்தது தெரிந்தது.

பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தினர். அதில் பலியானவர், கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பதும், அவருக்கு திருமணமாகி மனைவியும், 6 மாத பெண் குழந்தை இருப்பதும் தெரிந்தது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அவர், குடும்பத்துடன் சென்னையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story