நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் பணிகள்; கலெக்டர் ஆய்வு


நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் பணிகள்; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 26 Dec 2019 4:00 AM IST (Updated: 25 Dec 2019 9:57 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிலக்கோட்டை, 

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், சாணார்பட்டி, நத்தம், ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்தநிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் தேர்தல் பணிகளையும், அதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் குணவதி மற்றும் அதிகாரிகளிடம் தேர்தல் பணிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து வைக்கும்படியும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் இதர வசதிகளையும் செய்து தர தயாராக இருக்கும்படியும் ஆலோசனை வழங்கினார்.

இதேபோல் வத்தலக்குண்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வத்தலக்குண்டு ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையமான பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளை பார்வையிட்டார்.

மேலும் அங்கு தடுப்புகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், தேர்தல் ஏஜெண்டுகள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிடும் இடங்கள் உள்ளிட்டவற்றை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு, அதற்கான பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயச்சந்திரனிடம் கேட்டறிந்தார்.

Next Story