அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
வேலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
வேலூர்,
அனுமன் ஜெயந்திவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் காலை முதல் சிறப்பு அலங்காரம், சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று வழிபட்டனர்.
அதேபோன்று சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மூலவர் ஆஞ்சநேயருக்கு அரிசி மாவால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்கு வெளியே உள்ள ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இங்கும் காலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று வணங்கினர்.
ரங்காபுரத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி அனுமனுக்கு வெண்ணைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுதர்சன யாகமும் நடத்தப்பட்டது. புது வசூரில் உள்ள சகஸ்ரலிங்க யோக ஆஞ்சநேயர் கோவிலில் காலை 7 மணிக்கு மூலவர் நேத்ர தரிசனம் தொடங்கியது. பின்னர் கோ பூஜை, சொர்ண புஷ்பாஞ்சலி ஆகியவையும் நடைபெற்றது.
இதேபோன்று வேலூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story