பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Dec 2019 4:00 AM IST (Updated: 25 Dec 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது.

இதனை கருத்தில் கொண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி சென்னை குடிநீர் வாரியத்துக்கும், 11-ந் தேதி புழல் ஏரிக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு நவம்பர் மாதம் 1-ந் தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் புழல் ஏரியில் 2.500 டி.எம்.சி. தண்ணீர் இருப்பில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 28.70 அடியாக பதிவானது. 1,456 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 780 கனஅடி, சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 19 கனஅடி தண்ணீர் வீதம் அனுப்பப்படுகிறது. ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 474 கனஅடி வீதம், மழை நீர் 122 கனஅடி தண்ணீீர் வந்து கொண்டிருக்கிறது.

Next Story