கூடலூர் அருகே கேரள வனப்பகுதியில், விறகு சேகரிக்க சென்ற முதியவரை கடித்து கொன்ற புலி
கூடலூர் அருகே கேரள வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க சென்ற முதியவரை கடித்து கொன்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கூடலூர்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி தாலுகாவிற்கு உட்பட்ட நூல்புழா அருகே வடக்கனாடு ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு வசித்து வந்தவர் சடையன் என்ற மாஸ்தி(வயது 60). இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தார். பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க சென்றார். ஆனால் அதன் பிறகு சடையன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று அவரை தேடினர். அப்போது அங்குள்ள புதர் மறைவில் சடையன் பிணமாக கிடப்பதை கண்டனர். அங்கிருந்த கால் தடங்களை வைத்து, அவரை புலி கடித்து கொன்று இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது உடலின் சில பாகங்களை புலி தின்று இருந்தது. இதுகுறித்து சுல்தான்பத்தேரி போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்களை முற்றுகையிட்டு ஆதிவாசி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று ஆதிவாசி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சுல்தான்பத்தேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். கூடலூர் அருகே கேரள வனப்பகுதியில் முதியவரை புலி கடித்து கொன்ற சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வடக்கனாடு ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-
கடந்த 2015-ம் ஆண்டு பாஸ்கரன் என்பவரை புலி கடித்து கொன்றது. அதன்பிறகு புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கூண்டில் சிக்காமல், தமிழக எல்லையான கூடலூர் அருகே உள்ள பாட்டவயல் பகுதிக்கு புலி சென்றது. அங்கு தேயிலை தோட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்த பெண் ஒருவரை கடித்து கொன்றது. மீண்டும் வடக்கனாடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறையிடம் தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சடையன் என்பவரை புலி கடித்து கொன்று உள்ளது. இதுபோன்று மனித உயிர் பலி தொடர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு வனத்துறையினரின் அலட்சியமே காரணம். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story