தெய்வச்செயல்புரம் விசுவரூப சுந்தரவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழா - திரளான பக்தர்கள் தரிசனம்


தெய்வச்செயல்புரம் விசுவரூப சுந்தரவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழா - திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 26 Dec 2019 3:45 AM IST (Updated: 26 Dec 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தெய்வச்செயல்புரம் விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள தெய்வச்செயல்புரத்தில் விசுவரூப சுந்தர வரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் 77 அடி உயர விசுவரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு தனிச்சிறப்பு உண்டு. இலங்கையில் ராவணனின் பிடியில் இருந்து சீதையை மீட்பதற்காக ராமர் படையெடுத்து சென்றார். அங்கு நடந்த போரின் போது, லட்சுமணன் மூர்ச்சையாகினார். இதனால் அவரை உயிர்ப்பிக்க வீர ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி வந்தார். அவர் மலையை தூக்கி வந்த போது, மலையில் இருந்த சிறு, சிறு கற்கள் 6 இடங்களில் விழுந்தன. அந்த இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் விசுவரூப தரிசனத்தில் காட்சி அளித்து வருவதாகவும், இந்த கற்கள் விழுந்த இடங்கள் சிறிய மலைக்குன்றாக காட்சி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி நாமக்கல், சுசீந்திரம் தாணுமலை, சென்னை பரங்கிமலை, திண்டுக்கல் சின்னாளம்பட்டி, தெய்வச்செயல்புரம், இலங்கை ஆகிய இடங்களில் இந்த 6 கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த கோவில்களில் மட்டுமே ஆஞ்சநேயர் விசுவரூபத்தில் காட்சி அளிக்கிறார். இந்த 6 இடங்களிலும் ஆஞ்சநேயர் மலையை நோக்கி நிற்பது போன்று சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நவகைலாயம், நவதிருப்பதி போன்று இந்த 6 ஆஞ்சநேயர் கோவில்களும் அமைந்து உள்ளன.

இந்த 6 கோவில்களிலும், தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரத்தில் அமைந்து உள்ள 77 அடி உயர ஆஞ்சநேயர் உயரமானவர் ஆவார். இவர் வல்லநாடு மலையை நோக்கி காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமண தடை நீங்கும், கல்வி அபிவிருத்தி, செல்வம் பெருகும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இங்கு நேற்று அனுமன்ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று முன்தினம் முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் பஞ்சசுத்த ஹோமம், சுதர்சனஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், ஆஞ்சநேயர் சிறப்பு பூஜைகள் நடந்தன.

நேற்று காலை 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 27 வடைமாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் அன்னதானம் நடந்தது. விசுவரூப ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. கோவிலில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் அனுமனை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு கேசரி, வடை, லட்டு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதே போன்று தூத்துக்குயில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Next Story