திரைத்துறையினர் ஒத்துழைப்பு அளித்தால் இணையதளத்தில் புதுப்படங்கள் வெளியாவதை தடுக்க அரசு முயற்சிக்கும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
திரைத்துறையினர் ஒத்துழைப்பு அளித்தால் இணையதளத்தில் புதுப்படங்கள் வெளியாவதை தடுக்க அரசு முயற்சி எடுக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று 20 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாமல் இருந்த டிக்கெட் விலை நிர்ணயத்தை அ.தி.மு.க. அரசு தான் செய்து கொடுத்தது. அதற்குப் பின்னர்தான் தியேட்டர்கள் மூடப்படாமல் உள்ளன. அதேபோல் ஆண்டுக்கு ஒரு முறை பொதுப்பணித்துறை மூலம் புதுபிக்கப்பட வேண்டிய கட்டிட உறுதித்தன்மை சான்றை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து அது செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
தியேட்டர்களில் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியாக உள்ளது. இந்த வரி உள்ளாட்சி துறை மூலமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி முதலில் 30 சதவீதமாக இருந்தது. இது மிகவும் அதிகமாக உள்ளது என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 8 சதவீதமாக தமிழக அரசு குறைத்து உள்ளது. தியேட்டர்களுக்கு பொற்காலம் என்று சொன்னால் அது அ.தி.மு.க. ஆட்சியில் தான்.
திருட்டு வி.சி.டி.யை தடுக்க அ.தி.மு.க. அரசு தான் தனிச்சட்டம் கொண்டு வந்தது. பின்னர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் தான். திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என திரைத்துறையைச் சேர்ந்த இவர்கள் 3 பேரும் இணைந்து எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தால் நிச்சயமாக திருட்டு வி.சி.டி., இணையதளத்தில் புது திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க அரசு முயற்சிகள் எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், ‘‘ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பின்னர் பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்கப்படும். கயத்தாறு ஒன்றிய பகுதிகளில் உளுந்து, பாசிபயிறு உள்ளிட்ட பயிர்கள் மழையால் சேதம் அடைந்து உள்ளன. இதற்கு உரிய நிவாரணம் அரசால் வழங்கப்படும். மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து ஊர்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என்று கூறினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story