கல்லூரி பேராசிரியை மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி குழந்தை உயிரிழந்தது


கல்லூரி பேராசிரியை மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி குழந்தை உயிரிழந்தது
x
தினத்தந்தி 26 Dec 2019 4:15 AM IST (Updated: 26 Dec 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி பேராசிரியை தனது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் குழந்தை உயிரிழந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர்- வடக்கு மாதவி ரோடு, எம்.ஆர்.நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அன்பரசி(வயது 31). இவர்களுக்கு தனீ‌‌ஷ்கா(4), கோமதி என்கிற மேகா ஸ்ரீ(1) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன், அன்பரசி ஆகிய 2 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். தனீ‌‌ஷ்கா எல்.கே.ஜி. படித்து வருகிறாள். 2-வது பெண் குழந்தையான மேகா ஸ்ரீ அரியலூர் மாவட்டத்தில் உள்ள அன்பரசியின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வந்தாள். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் தனீ‌‌ஷ்காவை அன்பரசி தனது பெற்றோர் வீட்டில் கொண்டு விட்டு, விட்டு, தனக்கு கல்லூரி விடுமுறை என்பதால் 2-வது மகள் மேகா ஸ்ரீயை தனது வீட்டிற்கு கொண்டு வந்தார். ஏற்கனவே சரவணன், அன்பரசிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அன்பரசி வாழ்வதை விட, சாவதே மேல் என்று முடிவெடுத்து தனது மகள் மேகா ஸ்ரீயுடன் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் திடீரென்று குதித்தார். அப்போது குழந்தையும், அன்பரசியும் கிணற்றில் உயிருக்காக போராடி அபாய குரலை எழுப்பினர்.

குழந்தை உயிரிழந்தது

இந்த சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து அன்பரசியை கயிறு மூலம் உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே மேகா ஸ்ரீ தண்ணீரில் மூழ்கி விட்டாள். இதுகுறித்து தகவலறிந்து பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் விழுந்த குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் மேகா ஸ்ரீயை தீயணைப்பு வீரர்களால் பிணமாக தான் மீட்க முடிந்தது. அப்போது இறந்த மேகா ஸ்ரீயின் உடலை, அவளுடைய பெற்றோர், அக்கம், பக்கத்தினர் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் தற்கொலை செய்வதற்காக குழந்தையுடன் தாய் கிணற்றில் விழுந்ததில், குழந்தை தண்ணீரில் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story