ஆம்பூர் அருகே, இளம்பெண் கொலை வழக்கில் உறவினர்கள் 2 பேர் கைது - நகைக்காக கொன்றதாக வாக்குமூலம்
ஆம்பூர் அருகே இளம்பெண் கொலை வழக்கில் அவரது உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நகைக்காக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் ரேவதி அவரை விட்டு பிரிந்து தாயார் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. மகேஷ் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டகுண்டாவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்தார்.
சம்பவத்தன்று கணவருடன் செல்போனில் பேசுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதே ஊரில் வனப்பகுதி எல்லையோரம் சுண்டக்காபாறை என்ற இடத்தில் கழுத்தில் காயங்களுடன் ரேவதி பிணமாக கிடந்தார்.
மேலும் அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் நகை மற்றும் செல்போன் கொள்ளையடிக் கப்பட்டிருந்தது. இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரேவதியின் உறவினர்கள் செல்வராஜ் (வயது 44), சித்ரா (35) ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது நகைக்கு ஆசைப்பட்டு ரேவதியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்து சென்றதையும் அங்கு அவரை கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையே அவர்கள் வாக்குமூலமாக கொடுத்துள்ளனர். இதையடுத்து செல்வராஜ் மற்றும் சித்ராவை போலீசார் கைது செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story