உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மண்டலக்குழு அலுவலர்களுக்கான வாகனங்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மண்டலக்குழு அலுவலர்களுக்கான வாகனங்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Dec 2019 3:45 AM IST (Updated: 26 Dec 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மண்டலக்குழு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை கலெக்டர் வீரராகவராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மண்டலக்குழு அலுவலர்களுக்கான வாகனங்கள் வழங்கப்பட்டன. அவற்றை கலெக்டர் வீரராகவராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பான முறையிலும் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவிற்காக மொத்தம் 1,819 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 135 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் உதவி இயக்குனர்கள் நிலை அலுவலர்கள் தலைமையில் 1 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 1 உதவி மண்டல அலுவலர், 1 தலைமை காவலர், 1 வாகன ஓட்டுனர் வீதம் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு குழுவிற்கும் வாக்கிடாக்கி கருவி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணித்திட ஏதுவாக மொத்தம் 15 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு அலுவலர்களின் கண்காணிப்பு பணிகளின் மூலம் இதுவரை ரூ.38 லட்சத்து 60 ஆயிரத்து 400 மதிப்பில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 1,192 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவித்திடவும், தகவல்களை தெரிந்து கொள்ளவும் 1800 425 7038 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்ணுடன் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதுவரை 18 புகார்கள் வரப்பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதி மீறல் தொடர்பாக இதுவரை மொத்தம் 9 தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 364 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு இந்த மையங்களில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை வீடியோகிராபி, இணையதள கண்காணிப்பு, நுண் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் ஆகிய முறையில் கண்காணிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், ஊராட்சி களின் உதவி இயக்குனர் கேசவதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story