வைகை தண்ணீர் மானாமதுரைக்கு வந்தது - எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார்
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட வைகை தண்ணீரை மானாமதுரையில் எம்.எல்.ஏ. நாகராஜன் மலர் தூவி வரவேற்றார்.
மானாமதுரை,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பார்த்திபனூர் மதகு அணை ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அமைந்திருந்தாலும் இடது பிரதான கால்வாய் மூலம் சிவகங்கை மாவட்டமும் பயன்பெறுகிறது. இடது பிரதான கால்வாய் மூலம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, சாலைகிராமம் உள்ளிட்ட 39 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய்கள் மூலம் 13 ஆயிரத்து 481 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. ராமநாதபுரம் மாவட்ட பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்படும் போது சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
கடந்த முறை தண்ணீர் திறக்கப்பட்ட போது கண்மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக செல்லாததால், கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நெட்டூர் நாகராஜன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. நெட்டூர் நாகராஜன் கூறியதாவது:-
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விளைச்சலை பெருக்க வேண்டும். ஏற்கனவே மழை காரணமாக நாற்று நடவு பணிகள் முழுமையாக நடந்து முடிந்துள்ளன. எனவே அடுத்தடுத்து பாசனத்திற்கு தேவையான தண்ணீரை கண்மாயில் இருப்பு வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண் டும். இளையான்குடி, சாலைகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் மானாமதுரைக்கு நேற்று வந்து சேர்ந்தது. எம்.எல்.ஏ. நெட்டூர் நாகராஜன் மற்றும் கட்சியினர் வைகை ஆற்று தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.
Related Tags :
Next Story