ஈரோடு மாவட்டத்தில், நாளை முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 657 வாக்குசாவடி மையங்கள் தயார்


ஈரோடு மாவட்டத்தில், நாளை முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல்: 657 வாக்குசாவடி மையங்கள் தயார்
x
தினத்தந்தி 25 Dec 2019 10:43 PM GMT (Updated: 25 Dec 2019 10:43 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக 657 வாக்குச்சாவடி மையங்கள் தயாராக உள்ளன.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்ட தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 8 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 79 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 95 ஊராட்சி தலைவர்கள், 894 ஊராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 1,076 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் கதிரம்பட்டி, பிச்சாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகள், கொடுமுடி ஒன்றியத்தில் வள்ளிபுரம் ஊராட்சி, மொடக்குறிச்சி ஒன்றியத்தில் கஸ்பாபேட்டை ஊராட்சி என 4 ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சி 6-வது வார்டில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதுதவிர, ஈரோடு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் 22 கவுன்சிலர்கள், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 90 கவுன்சிலர்கள், கொடுமுடி ஒன்றியத்தில் 34 கவுன்சிலர்கள், கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் 4 கவுன்சிலர்கள், நம்பியூர் ஒன்றியத்தில் 20 கவுன்சிலர்கள், தாளவாடி ஒன்றியத்தில் 19 கவுன்சிலர்கள், டி.என்.பாளையம் ஒன்றியத்தில் 8 கவுன்சிலர்கள் என மொத்தம் ஊராட்சி கவுன்சிலர்கள் 201 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். எனவே முதல் கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட 1,076 பதவிகளில் 202 பதவிகள் தவிர மீதமுள்ள 874 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தல் நடக்கும் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மொத்தம் 657 வாக்குசாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இதில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 942 ஆண்கள், 1 லட்சத்து 94 ஆயிரத்து 145 பெண்கள், 31 மாற்று பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 118 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குச்சீட்டுகள், ஓட்டு போடும் பெட்டி, அழியாத மை உள்பட 72 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை நடக்கிறது. இதையொட்டி தேர்தலில் பயன்படுத்தும் வாகனங்கள் போலீஸ் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று காலை நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கிருந்து அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாகனங்களை அனுப்பி வைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, எட்டியப்பன் மற்றும் போலீசார், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாடகை வாகனங்களை பார்வையிட்டு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிரித்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்காக 167 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் 58 நடமாடும் கண்காணிப்பு குழுக்களுக்கான வாகனங்களும், 12 பறக்கும்படை அதிகாரிகளுக்கான வாகனங்களும் உள்ளன. இதற்காக வருவாய்த்துறையில் இருந்து ரூ.12 லட்சத்து 51 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் 2-வது கட்ட வாக்குப்பதிவுக்கு 162 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

மேலும் முதல்கட்ட தேர்தலில் போலீஸ்காரர்கள், ஆயுதப்படையினர், சிறப்பு போலீஸ் படையினர், ஓய்வுபெற்ற போலீஸ்காரர்கள், முன்னாள் படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர் என சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டு உள்ளது. தேர்தல் வாகனங்கள் எந்த அலுவலகங்களுக்கு சென்று தேர்தலுக்கான பொருட்களை ஏற்றிவிட்டு எந்த வழியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது”, என்றார்.


Next Story