காதலனுடன் வெளியே சென்றதை மறைக்க கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி போலீஸ் விசாரணையில் குட்டு அம்பலம்


காதலனுடன் வெளியே சென்றதை மறைக்க கடத்தல் நாடகமாடிய கல்லூரி மாணவி போலீஸ் விசாரணையில் குட்டு அம்பலம்
x
தினத்தந்தி 26 Dec 2019 5:00 AM IST (Updated: 26 Dec 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

காதலனுடன் வெளியே சென்றதை பெற்றோரிடம் மறைக்க கல்லூரி மாணவி நடத்திய கடத்தல் நாடகம் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

நாக்பூர், 

காதலனுடன் வெளியே சென்றதை பெற்றோரிடம் மறைக்க கல்லூரி மாணவி நடத்திய கடத்தல் நாடகம் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

கல்லூரி மாணவி

நாக்பூர் செமிநாரி ஹில் பகுதியை சேர்ந்த 21 வயது பெண், அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி நீண்டநேரம் ஆகியும், வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பதறி கொண்டு இருந்த நிலையில் அவர் தாமதமாக வீட்டுக்கு வந்தார். அவர் பதற்றத்துடன் காணப்பட்டார்.

இது குறித்து பெற்றோர் கேட்டபோது, தன்னை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றதாகவும், அவர்களிடம் இருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தப்பி வந்ததாகவும் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மாணவியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் அளித்தனர்.

தீவிர விசாரணை

இதைகேட்டு பரபரப்பு அடைந்த போலீசார் அந்த மாணவியை கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகர குற்றப்பிரிவு போலீசாரும் தங்களது விசாரணையை முடுக்கி விட்டனர்.

ஆனால் போலீசாரின் கேள்விகளுக்கு கல்லூரி மாணவி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

இதில் சம்பந்தப்பட்ட மாணவி ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் மகிழ்ச்சியுடன் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதன் மூலம் கல்லூரி மாணவி கடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.

பெற்றோரை ஏமாற்ற நாடகம்

இதையடுத்து மாணவியிடம் போலீசார் மீண்டும் நடத்திய விசாரணையில் அவரது குட்டு அம்பலமானது. சம்பவத்தன்று கல்லூரி முடிந்ததும் அந்த மாணவி தனது காதலருடன் நாக்பூர் புறநகரில் உள்ள வாகி பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்ப நேரமாகி விட்டது.

இதனால் பெற்றோரை ஏமாற்ற திட்டம் போட்ட மாணவி தன்னை ஒரு கும்பல் கடத்தி விட்டதாக கட்டுக்கதையை அளந்து விட்டார். ஆனால் இந்த பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்றதால் அவரது கடத்தல் நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் மாணவியை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Next Story