போலீஸ் நிலையத்துக்கு வேறு இடத்தை தேர்வு செய்து, பாவடி நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்
போலீஸ் நிலையத்துக்கு வேறு இடத்தை தேர்வு செய்து பாவடி நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்று ராக்கியாபாளையம் பகுதி மக்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூரை அடுத்த அவினாசி ராக்கியாபாளையத்தை சேர்ந்த நெசவு தொழிலாளர்கள் மற்றும் ஊர்மக்கள் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள சபாநாயகர் தனபால் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் ராக்கியாபாளையத்தில் 3 தலைமுறையாக நெசவுத்தொழில் செய்து வருகிறோம். இங்குள்ள மாரியம்மன் கோவில் மற்றும் பொன்காளியம்மன் கோவில் அருகே நெசவுத்தொழிலுக்கான நூலை பிரிப்பதற்காக பாவடி நிலம் உள்ளது. கோவில் திருவிழா உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பாவடி நிலத்தை பயன்படுத்தி வருகிறோம்.
இந்த நிலத்தை திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் கட்டுவதற்காக அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாக தெரியவருகிறது. அவ்வாறு போலீஸ் நிலையம் அமைந்தால் திருவிழா நிகழ்ச்சிகளை கோவில் அருகில் உள்ள மைதானத்தில் நடத்த முடியாமல் போகும்.
எனவே திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தை, ராக்கியாபாளையம் கிழக்கே உள்ள ராசாத்தி அம்மன் கோவில் அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெசவாளர்களுக்கு பாவடி நிலத்தை மீட்டுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story