திருப்பூரில், குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
திருப்பூரில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி 59-வது வார்டு சின்னியக்கவுண்டன்புதூர் பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி முத்துநகர் பிரதான சாலையில் நேற்று காலி குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் பல நாட்களாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டியபோது, அங்கிருந்த குடிநீர் குழாய்களை ஒப்பந்ததாரர்கள் உடைத்துவிட்டனர். இதனால் எங்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. ஏற்கனவே நகரில் அதிகரித்துவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை காரணம் காட்டி, மாநகராட்சி நிர்வாகம் வீடுகளில் தண்ணீரை தேக்கி வைத்தால் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது எங்களுக்கு குடிநீர் இல்லாததால், பலரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளோம். சிலர் குடிநீரை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பலமுறை கோரிக்கை விடுத்தோம். உரிய நடவடிக்கை இல்லை. எனவே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த பாதாள சாக்கடை ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி குடிநீர் வினியோக அலுவலர்கள் மற்றும் மத்திய போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைப்பதுடன், குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story