மேயர் முத்துபாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் வேண்டுகோள்


மேயர் முத்துபாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Dec 2019 3:45 AM IST (Updated: 26 Dec 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மேயர் முத்துபாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மதுரை,

மதுரை மாநகரின் இதய பகுதியாக பெரியார் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் அமைந்துள்ளன. இதில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார் நிலையத்தை அடையவேண்டும் என்றால் பெரும்பாலும் மேயர் முத்து பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். மேயர் முத்து பாலம் பல சிறப்புகளை கொண்டது.

மதுரா கல்லூரி பகுதியையும் பெரியார் நிலையத்தையும் கிட்டத்தட்ட இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் அடியில் ராமேசுவரம் மார்க்கத்துக்கான தண்டவாளமும் ெசல்கிறது. அதுபோல் அந்த பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான கடைகளும் இருந்தன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதுபோல், பாலத்தின் அருகில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.

பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு மிகவும் உறுதுணையாக இருந்த மேயர் முத்துபாலம் காலபோக்கில் பழுதடைய தொடங்கியது. குறிப்பாக அதிக எடை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களாலும், அதிக வேகத்தில் செல்லும் ஆம்னி பஸ்களாலும், அடிக்கடி ஏற்படும் விபத்துக்களாலும் இந்த பாலத்துக்கு பாதிப்பு வந்தது.

தற்போது மதுரை பெரியார் பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன பஸ் நிலையமாக மாற்றி கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மேயர் முத்துபாலம் வலுவிழந்து விட்டதாக மதுரை மாவட்ட கலெக்டர் வினய் நேற்று முன்தினம் அறிவித்தார்.

மேலும், 10 டன் எடைக்கு அதிகமாக எடை கொண்ட கனரக வாகனங்கள் அந்த பாலத்தில் செல்லவும் தடை விதித்துள்ளார். இதன் தொடர்ச்சி நடவடிக்கையாக இரவோடு இரவாக மதுரா கல்லூரியில் இருந்து பாலம் தொடங்கும் இடத்தில் அடுத்தடுத்து 3 வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. அதுபோல் பாலத்தின் மறு புறத்திலும் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலத்தின் தொடக்கத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையிலும், கனரக வாகனங்கள் பாலத்தில் செல்லக்கூடாது என்பதை தெரிவிக்கும் வகையிலும் எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் இருபுறத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பெரியார் பஸ் நிலையம் கட்டும் பணிக்காக நகரின் பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பெரியார் பஸ் நிலைய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில், மேயர் முத்துபாலமும் பழுதடைந்து விட்டதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கனரக வாகனங்கள் அந்த பாலத்தில் செல்வதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மேயர் முத்து பாலத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், பெரியார் பஸ் நிலையம் கட்டி முடிக்கப்படும் வரை பஸ்கள் மற்றும் எடை குறைந்த வாகனங்கள் அந்த வழியாக சென்று வருவதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story