விருதுநகரில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன சோதனையை தவிர்க்க வலியுறுத்தல்
விருதுநகரில் விபத்துகள் ஏற்படும் வகையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன சோதனை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விருதுநகர்,
மத்தியஅரசின் புதிய வாகனசட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் தமிழகம் முழுவதும் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை ஐகோர்ட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டதன் பேரில் போலீசார் குறுகிய பகுதிகளிலும் வாகன சோதனையை மேற்கொள்ள தொடங்கினர்.
இந்தநிலையில் கடந்த காலங்களில் சிலபகுதிகளில் போலீசாரின் நடவடிக்கைகள் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் போக்குவரத்து நெரிசல் இருந்த பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்துவதால் வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுவிட்ட நிலையில், அதில் இருந்து இறங்கும் வாகனங்கள் நகரின் பிரதான சாலையான ரெயில்வே பீடர் ரோட்டில் தென் மற்றும் வடக்கு பகுதியில் திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
இந்த சந்திப்பில் போலீசார் நின்று கொண்டு வாகன சோதனை நடத்துகின்றனர். அதிலும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள மாலை வேளைகளில் சோதனை நடத்தப்படுவதால் வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இதே போன்று பழைய பஸ்நிலைய நுழைவு வாயில், புல்லலக்கோட்டை ரோடு உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்துகின்றனர்.
போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்கு வாகன சோதனை அவசியமானது தான். ஆனால் அதே நேரத்தில் விபத்துகள் ஏற்படும் வகையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன சோதனை நடத்துவது என்பது ஏற்புடையது அல்ல. எனவே மாவட்ட போலீசார் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன சோதனையை நடத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பிரதான சாலைகளில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் சோதனை நடத்த போலீசாருக்கு, மாவட்ட போலீ்ஸ் நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story