கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கரின் பாதுகாப்பு குறைப்பு ஆதித்ய தாக்கரே, அன்னா ஹசாரேக்கு கூடுதல் பாதுகாப்பு


கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கரின் பாதுகாப்பு குறைப்பு ஆதித்ய தாக்கரே, அன்னா ஹசாரேக்கு கூடுதல் பாதுகாப்பு
x
தினத்தந்தி 26 Dec 2019 5:15 AM IST (Updated: 26 Dec 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிவசேனா எம்.எல்.ஏ. ஆதித்ய தாக்கரே, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு குறைப்பு

பிரபலங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த மராட்டிய அரசின் கமிட்டி அவ்வப்போது ஆய்வு செய்து, பாதுகாப்பு தரத்தில் மாற்றங்களை செய்து வருகிறது. இந்த கமிட்டி சமீபத்தில் எடுத்த முடிவின்படி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யுமான 46 வயது சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு இதுநாள் வரை ‘எக்ஸ்’ பிரிவின் கீழ் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்த பாதுகாப்பு தற்போது திரும்பப்பெறப்பட்டு, அவர் வெளியே செல்லும்போது மட்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆதித்ய தாக்கரே

இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வுமான 29 வயது ஆதித்ய தாக்கரேவுக்கு இதுநாள் வரை ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதேபோல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு வழங்கப்பட்டு வந்த ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு ‘இசட்’ பிரிவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பும், அஜித் பவாருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மந்திரிகளான ஏக்நாத் கட்சே, ராம் ஷிண்டே ஆகியோரின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரிகள் பலருக்கும் வரும் நாட்களில் பாதுகாப்பு குறைக்கப்படலாம் என தெரிகிறது.

Next Story